தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் விருது: மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழாவில் கெளரவம்!


மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கெளரவித்தார். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், "தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் 1997 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் மாநில மனித உரிமை ஆணையம் அமைத்தார். 

உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதிலும், மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.  மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம். சுயமரியாதை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம், மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான் என்றார். 

விழாவில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்-க்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார். மேலும் கன்னியாகுமரி, திருவள்ளூர், மற்றும் மதுரை காவல் ஆணையர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார். விழாவில் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதல்வர் வெளியிட்டார். 

உச்சநீதிமன்ற நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண் மிஸ்ரா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் முனிஷ்வர் நாத் பண்டாரி,  சட்டத் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் எஸ்.பாஸ்கரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு,  மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் கே.விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் டி.ஜெயச்சந்திரன், ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post