மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் காவியமாக வெளிவர இருக்கிறது பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த திரைப்படம் தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கி உள்ளது.
பொன்னியின் செல்வன் கதைக்களம் பண்டைய சோழ சாம்ராஜ்ய வரலாறு பேசுகிறது என்பதால், அந்த புதினத்தை படித்தவர்கள், படிக்காதவர்கள் என பல தரப்பினரும் காத்துக் கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி தமிழகத்தையே கொள்ளை கொண்டது. அந்த பாடல் வரிகளும், இசையும் அனைவருக்கும் பிடித்துப் போய் விட, படக்குழுவினர் ஒரு பாசிட்டிவ் வைப்ரேசனுக்கு ஆளானார்கள்.
"பொன்னி மகள் பார்க்கணுமே" என்ற அந்த பாடல் ஒலிக்காத செல்போன் இல்லை எனலாம். அந்தளவுக்கு செம பேமஸ் ஆகி விட்டது.
வந்தியத்தேவன் கேரக்டருக்கு அறிமுகமாக அமைந்திட்ட இந்த பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளது.
இப்படி இருக்கையில் ஆகஸ்ட் 19 ல் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். இளங்கோ கிருஷ்ணனின் வரிகள் கொள்ளை கொள்ளுகின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை டெம்ப்ட் ஏற்றுகிறது.
'பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்.. புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் ' என்ற வரிகள் எல்லாம் ஆதித்த கரிகாலனின் போர் தொழிலுக்கு செம இன்ட்ரோ...
'வரி வரிப் புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா.. சோழா..
மற மறப் புலி வீழாதடா
தாழாதடா சீலா.. சீலா..
வீரம் மானம் புலி மகன் இரு கண்ணல்லோ...
ஏரே வாடா பகை முகம் செகும் நேரம் வீரா..."
இந்த வரிகள் எல்லாம் ஆதித்த சோழன் நம்மையும் போருக்கு அழைப்பதாக நமக்கும் வீரம் வரும் என்பதில் எல்லாம் சந்தேகம் இல்லை.
ஆனால் இந்த பாட்டில் ' கள்ளாடிட.. தள்ளாடிட.. வாடா.. வாடா.. என்ற வரி தான் உறுத்துகிறது. என்னா.. து ஆதித்த கரிகாலன் கள் குடிக்க அழைத்தாரா? இல்லை அவர் தான் குடித்து விட்டு வலம் வந்தாரா? என்கிறார்கள் பொன்னியின் செல்வன் புதினத்தின் எவர்கிரீன் ரசிகர்கள்.
இதே மாதிரி தான் இதற்கு முன்னதாக வந்த டீசரில் கூட ஆதித்த கரிகாலன் பேசுவதாக ஒரு வசனம் அமைத்து இருக்கிறார்கள். அதில் ''இந்த கள்ளும், பாட்டும் எல்லாமே அவளை மறக்கத்தான்... அவளை மறக்கத்தான்... '' என்ற வரியும் இடம் பெறுகிறது.
ஆக, மானம் போற்றி வாழ்ந்த ஆதித்த கரிகாலனை, தமிழ் மன்னன், மாவீரன் சோழனை சம்பந்தமே இல்லாமல், கள் குடித்து போதையில் வெறி ஏறி திரியும் வீரனாக சித்தரித்து விட்டார்களோ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.
ஆதித்த கரிகாலன் குறித்து கிடைத்த கல்வெட்டு தகவல்களில் எல்லாம் ஆதித்த கரிகாலன் மாபெரும் வீரன் என்று தான் கூறப்பட்டு உள்ளது. அப்போதும் சரி, கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்திலும் சரி ஒரு சொல் கூட ஆதித்த கரிகாலன் கள்ளுண்டதாக இல்லை.
பொன்னியின் செல்வன் கதை முழுக்க வந்தியத்தேவன் வந்தாலும், கதையின் ஓட்டமும், மையக்கருவும் ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினியை சுற்றியே சுழலும்.
இப்படி இருக்கையில், கதையின் சுவாரசியத்தை கூட்ட ஆதித்த கரிகாலனை குடித்து விட்டு புலம்பும் குடிகரனாக்கி விட்டார்களோ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்.
பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவித்தான் படம் எடுக்கிறோம், அதையே எடுக்கவில்லை என்று கூறினாலும், ஆதித்த கரிகாலன் ஒரு சோழ இளவரசன், தமிழ் மாவீரன். அவரது கேரக்டரை இப்படி சித்தரிக்க எப்படித்தான் மனம் வந்ததோ என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.
மீண்டு வரும் சோழனின் வரலாற்றை பெரிய திரையில், நவீன வடிவில் காண கொண்டாட்டமாக காத்திருக்கிறார்கள் பலர். ஆனால் இந்த டீசரும், பாடல் வரிகளும் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ம்ம்... இன்னும் படம் வெளியானால் தான்.. தெரியும்.. மணிரத்னம் சோழனை பெருமைப்படுத்தி இருக்கிறாரா? அல்லது வேண்டும் என்றே வச்சு செஞ்சிருக்காரா? என்பது..
அதுவரை பொன்னியின் செல்வன் ரசிகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் பொறுத்திருப்போம்..