மது போதையில் தகராறு செய்த கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி படுகொலை - மற்றொரு கட்டிட தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு.!


பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை - மது போதையில் தகராறு செய்த கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி படுகொலை - மற்றொரு கட்டிட தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் அருகேயுள்ள சிவாஜி நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி என்பவரது மகன் பாலமுருகன் (30). கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இவரது மனைவி பிரிந்து விட்டார். 

ஒரு குழந்தை மட்டும் உள்ளது. குழந்தை, பாலமுருகன் சித்தி ரேவதி வீட்டில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. பாலமுருகன் தினந்தோறும் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. 

பாலமுருகனின் தந்தை பெருமாள்சாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த குட்டி என்ற வடிவேல் என்பவரது மகன் முத்துராஜ் (39). இவரும் கட்டிட தொழிலாளி. இவர் பாலமுருகனிடம் ரூ10 ஆயிரம் கடன் பெற்று இருந்தாக தெரிகிறது. 

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் முத்துராஜிடம், பாலமுருகன் தான் கடனாக கொடுத்த 10 ஆயிர ரூபாய் உடனடியாக திருப்பி தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தற்பொழுது தன்னிடம் பணம் இல்லை, சில தினங்களில் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இருப்பினும் பாலமுருகன், பணத்தினை உடனே தர வேண்டும் என்று கூறி அவதூறாக பேசியுள்ளார். 

இதையெடுத்து முத்துராஜ், பாலமுருகனின் சித்தி ரேவதியிடம் போய், பணத்தினை விரைவில் தருவதாகவும், பாலமுருகன் அவதூறாக பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ரேவதி, பாலமுருகனை சத்தம் போடடுள்ளார். மது போதையில் இருந்த பாலமுருகன் ரேவதிவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இது குறித்து ரேவதி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதற்கிடையில் அதிக மது போதையில் இருந்த பாலமுருகன், நேற்றிரவு எப்படி நீ பணம் கேட்டதை சித்தியிடம் சொன்னாய் என்று கூறி முத்துராஜ்வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து முத்துராஜ், தான் வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனை;ககு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post