திருப்பூர் கே.வி.ஆர்., நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பிரகாஷ் கே.வி.ஆர்., நகரில் குடியிருந்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். ஷெரிப் காலனி பகுதியில் பணி செய்து வந்திருக்கிறார்,
இந்த நிலையில் இன்று மதியம் உஷா தியேட்டர் அருகில் உள்ள டிரான்ஸ்பாரத்தில் பழுதுபார்ப்பதற்காக ஏறி இருக்கிறார். முன்னதாகவே அவர் மின்சாரத்தை நிறுத்தி விட்டுத்தான் ஏறியதாக தெரிவிக்கிறார்கள்.
இருந்த போதிலும் அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பாரத்தில் மேல் பகுதியில் செல்லக்கூடிய உயர் அழுத்த மின்சார கம்பியில் அவர் தலை பட்டதில் மின்சார தாக்குதலுக்கு ஆளானார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவரது முகம் மற்றும் தலை கருகி பரிதாபமாக பலியானார். இந்த தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினார்கள். தகவலறிந்து வந்த திருப்பூர் தெற்கு போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது போல் ஒப்பந்த ஊழியர்கள் பணியின் போது மின்சார தாக்குதலுக்கு ஆளானால் எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை என்றும், பலியானவரின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.