தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 வருடமாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத்தால் ஆன பொருள் என்ன என்பது தெரியவில்லை.
மேலும் அந்த தங்கத்தில் மேல் சிறு சிறு கோடுகள் உள்ளது. ஆய்வில் தங்கம் கிடைத்துள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப்பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தினங்களுக்கு முன்பு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில், இறந்தவர்களை புதைத்த இடத்தில் தங்கத்தினால் ஆன நெற்றிப்பட்டையம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.