தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தானும் தமிழக ஆளுநரும், நீண்ட நேரம் அரசியல் குறித்து விவாதித்ததாக செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு அவர் திரும்பினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன்.
ஆளுநர் ஆர்.என்.ரவி காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவில் இருந்தவர்.
தமிழகத்தை மிகவும் நேசித்துள்ளார். குறிப்பாக தமிழக மக்களின் நேர்மையும் கடின உழைப்பும் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக, தமிழக மக்களின் ஆன்மீக உணர்வு அவரை மிகவும் ஈர்த்துள்ளது.
தமிழக மக்களின் நல்லதுக்காக எது செய்யவும் தயாராக இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். இவற்றுடன் அரசியல் குறித்து நீண்ட நேரம் அதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை” என்றார்.
இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்திடம்
செய்தியாளர்கள் `பால், தயிர் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது பற்றி உங்களுடைய கருத்து என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், `நோ கமெண்ட்ஸ்' என்றார். பின்னர் தனது 169 படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு, வரும் 15-ம் தேதி அல்லது 22-ம் தேதி தொடங்கும் என்றும் கூறினார்.