கோவில்பட்டி - எட்டயபுரம் ரோட்டில் அரசு நூலகம் அருகே மிகவும் பழமையான வாகை மரம் இருந்தது. நேற்று இந்த மரம் திடீரென்று பயங்கர சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது. அப்போது அருகில் இருந்த மின்வயர்கள் மீது மரத்தின் கிளைகள் விழுந்ததால் பாரம் தாங்க முடியாமல் மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாததால் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
பொதுவாக கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் இவ்வழியாகத் தான் செல்ல வேண்டும். இதனால் இந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். ஆனால் நேற்று மரம் விழுந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தரராஜ் தலைமையில் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. அதன்பிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.