அணைக்காக உயிர் தியாகம் செய்த நல்லம்மனுக்கு ஆற்றங்கரையில் பொங்கல் வைத்து வழிபாடு
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நல்லம்மன் கோவில் மூழ்கியுள்ள நிலையிலும், அணைக்காக உயிர்த்தியாகம் செய்த நல்லம்மனுக்கு ஆற்றங்கரையில் பொங்கல் வைத்து வழிபாடு.
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகில் நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணை கட்டும்போது, அணை நடுவில் உடைந்து கொண்டே இருந்த காரணத்தால் உடையும்
பகுதியில் நல்லம்மன் என்ற சிறுமி நுழைந்து உயிர்த்தியாகம் செய்ததை அடுத்து அந்த அணை கட்டப்பட்டு வலுவாக இருக்கிறது. இதனால் நல்லம்மனுக்கு அவரது வழித்தோன்றல்கள் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தி வருவது வழக்கம்.
இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோவில் முழுமையாக மூழ்கியுள்ளதால் இந்த ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோவில் விழாக்குழுவினர் ஆற்றங்கரையில் பொங்கல் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
நல்லம்மன் தடுப்பணைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில் வெள்ளம் தடுத்த போதும் இன்று ஆற்றங்கரையில் பச்சை குடிசை அமைத்து நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.