சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.
கசப்புகளை மறந்து விட்டு அதிமுக ஒன்று பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள். அன்பு சகோதரர் நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். கூட்டுத் தலைமையாக செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின் இரு அணிகளாக பிரிந்து, பின்னர் இணைந்தோம். அதிமுகவை சிலர் தன்வசம் கொண்டுபோக நினைத்ததே இன்றைய நிலைக்கு காரணம். பொதுக்குழு உறுப்பினர்களால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகின.
அதிமுக சட்டவிதிகளை இயற்றவோ, மாற்றவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 2663 பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக தொண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிவித்தனர்.
ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது நியாயமா. ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது. பதவியில் இருக்க வேண்டும் என்பதே விருப்பம். ஓபிஎஸ் குடும்ப உறுப்பினர்களுக்கும், மகனுக்கும் பதவி வேண்டும் என்பதே அவர் விருப்பம். சசிகலாவை எதிர்த்து தானே தர்ம யுத்தம் செய்தார்? இப்போது அழைப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.