தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
தமிழகத்தில் பல விமான ஓடுதளங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற எத்தனை விமான ஓடுபாதைகள் நம்மிடம் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது எனகேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குத் தங்கம் தென்னரசு பதில் கூறுகையில், தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். மீதமுள்ளவை AAI அல்லது இந்திய ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன.
கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம் ஆகியவை இந்திய விமானப் படை கட்டுப்பாட்டில் உள்ளன. நெய்வேலி விமான ஓடுதளம் என்எல்சியிடம் உள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி விமான ஓடுதளத்தை முக்கியத் திட்டமாகக் கையில் எடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக நிறுவி தமிழக அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி விமான ஓடுதளம் பயன்பாடின்றி உள்ளதால் இதை எப்படி விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றுவது என்பதை டிட்கோ (TIDCO) அதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது என்றார்