இராமநாதபுரம் சத்யா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்புகளை துண்டிக்க வந்த அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியதால் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இராமநாதபுரம் சத்யா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக அங்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருப்பவர்களை அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த வீடுகள் ஊருக்கு வெளிப்புறமாக வசதி வாய்ப்பற்ற நிலையில் இருப்பதால் அங்கு குடியேற அந்த பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்து ஏற்கனவே குடி இருந்த பகுதியிலேயே குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர் இதற்கு அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் பல்வேறு கட்டமாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில் இன்று முதல் கட்டமாக சத்யா நகர் பகுதியில் மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் வந்தனர், அப்போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் கம்பங்களை சூழ்ந்து பெண்கள் அமர்ந்து கொண்டு மின் இணைப்பை துண்டிக்க விடாமல் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியதால் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
செய்தி மற்றும் படம்
பாலமுருகன்