தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண். 17, நாள்: 31.08.2021இன்படி "நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2022-2023ஆம் நிதியாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி 03.06.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 28.07.2022 அன்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவு செய்து அனுப்புவார். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டி நாளன்று அறிவிக்கப்படும்.
பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- இரண்டாம் பரிசு ரூ.3000- மூன்றாம் பரிசு ரூ.2000- வீதம் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000- வீதம் வழங்கப்பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.