தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு,
அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். முதற்கட்டமாக 6.5 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் எழிலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்