தூத்துக்குடியில் ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களுக்கு சதுரங்க விளையாட்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.!*


தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களுக்கு சதுரங்க விளையாட்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பேசியதாவது: 

தமிழ்நாட்டின் சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 2 மாணவர்கள், 2 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 

‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” நீங்களும் வளர்ந்து செஸ் போட்டியில் கலந்துகொள்ளலாம். செஸ் போட்டி இந்தியாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குப்தர் அரசவையில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு.

தமிழ்நாட்டின் சென்னையில் செஸ் போட்டி நடைபெறுவது சென்னைக்கே பெருமையாகும். தமிழ்நாடு முதலமைச்சர், ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து விழிப்புணர்வு பாடல் வெளியிட்டுள்ளார்கள். சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பு சதுரங்க விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்று ஒவ்வொரு சட்டமன்ற அளவிலும் மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் 6 மைதானங்கள் வர இருக்கின்றது.

மாணவர்களாகிய உங்களுக்கு ஆர்வம் இருப்பதை படிக்கலாம். விளையாடலாம். அதில் பெரிதாக யோசிக்கனும். படிப்பாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும் தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும். செஸ் விளையாடினால் ஞாபகசக்தி, திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான திறமைகளும், அனுபவங்களும் கிடைக்கும். 

எனவே எல்லோரும் செஸ் விளையாடுங்கள். தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள். நாம் எங்கிருந்தாலும் சாதிக்க முடியும். மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியில் நீங்கள் சாதிப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ரத்தினராஜ், புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ராயப்பன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post