சேலம்:ஜூலை.21. 6-வது தமிழ்நாடு பிரிமியர் லீக்( டி.என்.பி.எல்)20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட,8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன
அதன்படி சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் முதன் முறையாக தொடங்கிய டி. என்.பி.எல்.போட்டியில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின, முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கௌசிக் காந்தி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக, கோபிநாத்,ஜாபர் ஜமால் ஆகியோர் களம் இறங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கோபிநாத் 42 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், சோனு யாதவ், அலெக்ஸாண்டர், அருண்குமார் தலா 1 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர்.
பின்பு களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி அபாரமாக ஆடி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர்கள் கௌசி காந்தி 46 ( 45 பந்து,3 பவுண்டரி, 2 சிக்ஸர்) ரன்களும், ஜெகதீசன் 39 (33 பந்து 5 பவுண்டரி) ரன்களும் அதிகபட்சமாக சேர்த்திருந்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பவுலர் எம். சித்தார்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.