தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பெருமாள் (39) என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்திவருகிறார்.
இவரது கடையில் கடந்த 29.06.2022 அன்று இரவு கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 30,000/- பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
அதே போன்று அன்றைய தினமே (29.06.2022) தூத்துக்குடி பிரையண்ட் நகர் 7வது தெருவை சேர்ந்த பாண்டி மகன் பரமேஸ்வரன் (54) என்பவருக்கு சொந்தமான பிரையண்ட் நகர் 3வது
தெருவில் உள்ள மளிகை கடையிலும் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 10,000/- பணத்தையும், ரூபாய் 2,000/- மதிப்புள்ள கைகடிகாரத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் நேற்று (30.06.2022) அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில்,
தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார் (22), தூத்துக்குடி அழகேசபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பாண்டியராஜ் மகன் பாஸ்கர் (23) மற்றும் தூத்துக்குடி 2வது ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த முத்து மகன் செல்வராஜ் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து மளிகை கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.
உடனடியாக தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் மேற்படி எதிரிகள் ராம்குமார், பாஸ்கர் மற்றும் செல்வராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து மேற்படி 2 கடைகளிலும்
திருடப்பட்ட மொத்தம் ரூபாய் 36,000/- பணத்தையும் ரூபாய் 2,000/- மதிப்புள்ள கைகடிகாரத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகளில் ராம்குமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் மற்றும் மத்தியபாகம் காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், எதிரி செல்வராஜ் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் மற்றும் வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், பாஸ்கர் மீது தூத்துக்குடி வடபாகம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது.
மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய எதிரிகளை உடனடியாக கைது செய்த தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.