"ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர ஆசை இருக்கிறதா ? உதவி செய்ய தயராக இருக்கிறேன்" - பெற்றோருடன் போராட்டம் நடத்திய சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய கோவில்பட்டி கோட்டாட்சியர்.!

 

கோவில்பட்டி அருகே உள்ள  எம்.குமரெட்டையாபுரத்தை சேர்ந்த விவசாயி சண்முகம். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் அமைக்க வேண்டும் என்பதற்காக அரசு அவரது நிலத்தினை கையகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான இழப்பீட்டு தொகையை தற்பொழுது வரை அரசு வழங்கவில்லை. பலமுறை முதல்வர் முதல் அனைத்து அரசு அதிகாரிகள் வரை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அரசு எடுத்த தனது நிலத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அல்லது தனது நிலத்தினை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதனை வலியுறுதி விவசாயி சண்முகம், தனது மனைவி முருகேஸ்வரி, மகன் கமலேஷ், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் ஆகியோருடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, கைகளில் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோட்டாட்சியர் மகாலட்சுமி அழைத்து பேசினார். மேலும் அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவினையும் பெற்றுக்கொண்டார். விரைவில் பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, விவசாயி சண்முகம் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். 

அப்போது தந்தையுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் கமலேஷினை அழைத்த கோட்டாட்சியர் மகாலட்சுமி கமலேஷ் படிப்பு விபரம் குறித்து விசாரித்தார். 10 வகுப்பு தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருப்பதாகவும், 11ம் வகுப்பில் வரலாறு பாட பிரிவு எடுக்க இருப்பதாகவும், மேல்நிலை முடிந்ததும் ஐ.டி.ஐ படிக்க உள்ளதாக சிறுவன் கமலேஷ் தெரிவித்தார். இதையெடுத்து கோட்டாட்சியர் மகாலட்சுமி அரசு வேலைக்கு செல்ல வேண்டும், அதற்கு ஏற்றாற் போல் படிக்க வேண்டும், குரூப் 1 எழுதி அரசு அதிகாரி அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர ஆசை இருக்கிறதா என்று கேட்டார். சிறுவன் கமலேஷ் ஆமாம் என்று தலையாட்டினார். அது மட்டுமின்றி எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் கேட்கலாம், அரசு தேர்வுகளுக்கு தயராக தேவையான உதவிகளை செய்வதாகவும் சிறுவன் கமலேஷிடம் கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post