முகமது நபி குறித்து பாஜகவினர் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இந்திய தூதர் தீபக் மிட்டலுக்கு கத்தார் சம்மன்!

 

கத்தார் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதரை வரவழைத்து, முஹம்மது நபிக்கு எதிரான பாஜக செய்தி தொடர்பாளர்களின் கருத்துகளைக் கண்டித்தது.

கத்தார் வெளியுறவு அமைச்சகம், இன்று, இந்திய நாட்டிற்கான தூதர் டாக்டர் தீபக் மிட்டலை வரவழைத்து, கத்தார் அரசின் ஏமாற்றத்தையும் அதன் முழு நிராகரிப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ குறிப்பை அவரிடம் அளித்தது. முகமது நபிக்கு எதிராக இந்தியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்” என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்தியாவில் ஆளும் கட்சி வெளியிட்ட அறிக்கையை கத்தார் அரசு வரவேற்றது, அதில் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கோபப்படுத்தும் வகையில் அவர் கூறிய கருத்துக்களால் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து கட்சியின் செய்தித் தொடர்பாளரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. கத்தார் அரசு இந்திய அரசாங்கத்திடம் இருந்து இந்த கருத்துகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் உடனடி கண்டனத்தை எதிர்பார்க்கிறது, இது போன்ற இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் தண்டனையின்றி தொடர அனுமதிப்பது, மனித உரிமைகள் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அது கூறியது.

சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக பகீர் புகார் எழுந்தது.

இதையடுத்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சுக்கு இஸ்லாமிய மக்கள், மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் மேலும் அரபு நாடுகளிலும் இந்த பேச்சு எதிரொலித்தது.

சமூக வலைதளங்களில் பாஜக-வுக்கு எதிராக பல்வேறு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு நிலையில் பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து வழிவிட்டார் இதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சையும் சேர்ந்து கொள்ள பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து நிலையில் இந்த சர்ச்சை பெரிய விவகாரமாக வெடித்தது. இதனால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு எதிராக மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரது பேச்சின் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், 'எந்த மதத்தையோ, பிரிவையோ அவமதிக்கும் விதமான பேச்சை பாஜக ஒருபோதும் ஏற்காது. இது போன்று பேசுபவர்களை பாஜக ஒருபோதும் அங்கீகரிக்காது. ஆயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் அனைத்து மதங்களும் வளர்ந்து தழைத்தோங்கின.

பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. மதத்தை இழிவுபடுத்துபவர்களை பாஜக நிராகரிக்கிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி மரியாதையுடன் அவர்களின் மதங்களை பின்பற்ற அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், அனைவரும் ஒற்றுமையுடனும் கண்ணியத்துடனும் வாழ்ந்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அனுபவிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது' என அந்த அறிக்கையில் அருண் சிங் கூறியுள்ளார்.



Ahamed

Senior Journalist

Previous Post Next Post