தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் மின் பாதை ஆய்வாளர் ஆனந்த பாண்டியன். இவரது சொந்த ஊர் கயத்தார், இவர் திருநெல்வேலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அலுவலகத்திற்க்கு வந்த ஊழியர்கள், அலுவலகத்திற்க்குள் ஆனந்த பாண்டியன் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். நள்ளிரவில் மின்சார வாரிய அலுவலத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் ஆனந்தபாண்டியை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கை ரேகை நிபுனர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்ததுடன், ஆனந்தபாண்டியை கொலை செய்தவர்கள் யார் ? எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வாரிய ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட ஆனந்தபாண்டியனுக்கு (வயது 51). இவருக்கு திருமணமாகி மனைவி ஒருமகன், ஒருமகள் உள்ளனர்.