தமிழ்நாடு பள்ளி மாணவ – மாணவிகளுக்கான உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக “நான் முதல்வன்” எனும் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழக முதல்வர் அவர்களால் 25.06.2022 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் மாணிக்கம் மஹாலில் 29.06.2022 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் ஆயத்தப்பணிகள் குறித்து இன்று மாணிக்கம் மஹாலில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஷண்முகையா மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், 2021-2022ஆம் கல்வி ஆண்டில் பயின்ற +2 மாணவ / மாணவியர்களின் உயர்கல்வி தேர்வு செய்தல் குறித்தும், உயர்கல்விக்கான வங்கிக்கடன் பெறுதல் / கல்வி உதவித் தொகை பெறுதல் தொடர்பு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வினை எதிர் கொள்ளுதல் குறித்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள்,மாவட்ட ஆட்சியர் / மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற உயர் அலுவலர்கள், கல்வியாளர்கள், சான்றோர் பெருமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக பெங்களூர், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய பேராசிரியர் மற்றும் மேனாள் விண்வெளித்துறை செயலர் டாக்டர்.கு.சிவன் அவர்களும் ஆலோசனை வழங்க உள்ளார்கள்.
இன்று இந்நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்தார்கள். எனவே, 2020-2021ஆம் கல்வி ஆண்டில் +2 முடித்த மாணவ செல்வங்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், சான்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் பயனடையவும் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.