சுழல் - மகத்தான நிலவியல் படையல்!

புஷ்கர் - காயத்ரி இணையரின் எழுத்தில், பிரம்மா, அனுசரண் இருவரும் முறையே நான்கு என மொத்தம் எட்டு அத்தியாயங்களாக இயக்கியுள்ள ‘சுழல்’ வெப் சீரிஸ் அமேசானில்  வெளியாகியுள்ளது. 

இந்தத் தொடர் வெளியாகும் முன்பே இதன் ட்ரெய்லரை பலமுறை பார்த்தும் பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை. வெப் சீரிஸ்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென உள்ளூர் முதல் சர்வதேச அளவில் ஏற்கனவே தீர்மானம் செய்யப்பட்டபடி, வழக்கமான க்ரைம் திரில்லராக இருக்கும் என எனக்கு நானே முடிவு செய்துகொண்டேன். அதுவும் ஒருவகையில் ‘சுழல்’ வெப் சீரிஸ்ஸை முழுமையாக அனுபவித்து பார்க்கும் அளவிற்கு நல்லதாகிப் போனது. அதேநேரம் இது முழுமையான Investigation Crime Thriller வெப் சீரிஸ் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும், ‘சுழல்’ வெப் சீரிஸ் படமாக்கப்பட்ட விதம் முற்றிலும் புது அனுபவத்தைக் கொடுத்தது. அதற்கான பெரும்பங்கு கதைக்களமும் அதன் பின்னணியில் சுழன்றடித்த மயானக் கொள்ளை திருவிழாவும் தான் என அடித்துக் கூறுவேன்.

பெரும்பாலான படைப்புகள் நிலவியல் சார்ந்த அடிப்படையான கூறுகளையும் அதன் தொன்மங்களையும் விட்டு வெகுதூரம் விலகி ஏனோதானோவென்று உருவாகின்றன. கதைகளில் அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டுமென்ற நுட்பங்கள் பலருக்கும் தெரிவதில்லை, அப்படியே தெரிந்தாலும் அவற்றைக் காட்சிப்படுத்த முழுமையாக முயற்சிப்பதில்லை. க்ரைம் திரில்லர் படைப்புகள் என்றால், அதில் இருக்கும் மர்ம முடிச்சுகளை மட்டும் சரியாக அவிழ்த்துவிட்டால் போதுமென நினைக்கின்றார்களோ என்னவோ.?

ஆனால், சுழல் தொடரில் நிலவியல் சார்ந்த தொன்மங்களும், க்ரைம் திரில்லரின் மர்ம முடிச்சுகளும் அற்புதமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அதுவே இந்தத் தொடரின் முதல் பெரும் வெற்றி. மயானக் கொள்ளை என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது கிராமங்களில் நடக்கும் இதுபோன்ற திருவிழாக்கள் தான். அதாவது ஏதேனும் தென் மாவட்டங்களின் சாயலோ அல்லது முற்றிலும் நகரங்களின் தொடர்பில் இருந்து விலகி நிற்கும் குக்கிராமங்களின் சாயலோ தான்.  அதை இங்கே முற்றிலும் வித்தியாசப்படுத்த சாம்பலூர் என்ற மலைப் பிரதேசத்தை கதைகளமாக தேர்வு செய்தது அட்டகாசமாக கை கொடுத்துள்ளது.

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் செம்மையாக காட்சிப்படுத்தப்பட்ட மயானக் கொள்ளை தொடர்பான காட்சிகளை நான் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தேன். பிரமாதம்... பிரமாதம்... பிரமாதம்..! பார்வையாளனை சுண்டி இழுக்கும் அளவிற்கு அப்படியொரு நேர்த்தி. இன்னும் சொல்லப் போனால், அத்தனைக் காட்சிகளும் எனக்கு நேரிலேயே பார்ப்பது மாதிரி இருந்தன. அதேபோல் எப்படியாவது மலைப் பிரதேசம் எங்கேனும் சென்று, மயானக் கொள்ளை திருவிழாவை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது. தமிழ் வெப் சீரிஸ்களில் வெறுமெனே கதைகளை மட்டும் வைத்துக்கொண்டு பார்வையாளர்களை வசியம் செய்ய முடியாது. அதன் பின்னணியில் இப்படியான தொன்மங்களோ அல்லது நிலவியல் சார்ந்த வரலாறுகளோ இருக்க வேண்டும். திரைக்கதையும் காட்சிப் பின்னணியும் ஒன்றையொன்று போட்டிப் போட்டு பயணிக்க வைப்பது தான் படைப்பாளர்களின் தனித்திறமை. அப்படி கை கூடிவிட்டால் தமிழில் ‘சுழல்’ போன்ற பல இணையத் தொடர்கள் வெற்றிகரமாக உருவாகும்.    


பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுமிகளில் சிலர் ஆண்களை முழுமையாக வெறுத்து தனிமை விரும்பிகளாக முடங்கிவிடுவது உண்டு. ஐஸ்வர்யா ராஜேஷின் நந்தினி என்ற பாத்திரம் இதை தான் உணர்த்துகிறது. அதேபோல் இன்னும் சிலரோ சரியான ஆறுதலையும் அரவணைப்பையும் தேடி இன்னொரு ஆணிடம் தஞ்சமடைவதுண்டு. ஐஸ்வர்யா ராஜேஷின் தங்கையாக வரும் நிலா என்ற பாத்திரம் இதற்கு உதாரணம். இந்த இரண்டு வகைகளையும் ஒரே கதையில் உள்ளடக்கியதும், இருவரும் யாரால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஒரே பாத்திரத்தின் மூலம் விவரிப்பதும் நச் ரகம். ஆனாலும் நிலா - அதிசயம் இருவரின் விடலைப் பருவ காதல் காட்சிகள் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் இருவருக்குமான நெருக்கமான காட்சிகளை குறைத்திருக்கலாம். இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் சிறுமிகள் இப்படியாக முதிர்ச்சியற்று முடிவுகள் எடுப்பதையும் காண முடிகிறது. அதன் நீட்சியாக அந்தக் காதல் காட்சிகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும் போல.?

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன், ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் கதைக்குள் சரியாக பொருந்தி பலம் சேர்த்துள்ளனர். திருவிழா காட்சிகளுக்காக கலை இயக்குநர் அருண் வெஞ்சரம்மூடு, ஒளிப்பதிவுக்காக முகேஷ், எடிட்டிங்கில் ரிச்சர்ட் கெவின், பின்னணி இசைக்காக சாம் சிஎஸ் என அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். ‘சுழல்’ தொட்ரின் எட்டு அத்தியாயங்களும் மகத்தான நிலவியல் படையல்!

-களந்தை அப்துல் ரஹ்மான்.

Previous Post Next Post