ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து, அங்கு பணிபுரியும் வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நூற்பாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், இங்கு பணிபுரிந்து வந்த ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி கசரப் என்பவர் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ஆலை நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கோபி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனைத்தொடந்து புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தொழிலாளி கசரப்பை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தனியார் நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு ஆலையை தொடர்ந்து இயக்கி வருகின்றனர். இதன் காரணமாக பல ஆண்டுகளாக இங்கு பணிபுரியும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக தமிழ்நாடு நிறுவனங்களில் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு முறை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில், உள்ளூர் மக்களுக்கு எதிராக வடமாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.