தூத்துக்குடி மாநகராட்சி நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மச்சாது நகர் பகுதியில் அமைந்துள்ள நுண் உர செயலாக்க மையத்தில் வைத்து திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து கையாளுவது தொடர்பான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் நேரடியாக செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் கூறுகையில் "தூத்துக்குடி மாநகராட்சியில் நாள்தோறும் 180 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக பிரித்தெடுக்கப்பட்டு 11 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
தினசரி சேகரிக்கப்படும் 180 டன் குப்பைகளில் 60 டன் குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரிக்காமலே கொடுக்கின்றனர். எனவே இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தபடுகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியில் தேவைக்கேற்ப கூடுதலாக நுண் உர மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உதவி ஆணையர்கள் சரவணன், தனசிங், நகர்நல அலுவலர் அருண், சுகாதார ஆய்வாளர் ஹரிகனேஷ் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வீ கேன் டிரஸ்ட் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.