சிப்காட் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.!


சர்வதேச குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தின விழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச தின விழா ஜூன் 27 அன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், 

சிப்காட் திட்ட அலுவலகம் அவர்களின் மற்றும் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆகிய துறைகள் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று சிப்காட் திட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட ஆட்சியர்செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். சிப்காட் வளாகத்தில் உள்ள 70 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பொது மருத்துவம், கண், தோல், காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகிய பிரிவு சிறப்பு மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட பணியாளர்கள் அனைவருக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். 

ஆரம்ப நிலை பரிசோதனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர பரிசோதனைகளும் செய்யப்பட்டு அறிக்கைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா மற்றும் சிப்காட் திட்ட அலுவலர் லியோவாஸ், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாநகர நல அலுவலர் மரு.அருண், தூத்துக்குடி கோட்டாட்சியர், தூத்துக்குடி வட்டாட்சியர், சிப்காட் தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் ஜோ.பிரகாஷ் மற்றும் தர்மராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post