கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தீ குச்சிகள் எரிந்து நாசமானது.


கோவில்பட்டி அருகே கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தயாரித்து வைத்திருந்த தீப்பெட்டி குச்சிகள் எரிந்து நாசமானது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை சேர்ந்த இக்னேஷ் மனைவி செல்வம்(58) என்பவருக்கு சொந்தமான எந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஆலை 4 கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தீப்பெட்டி ஆலையில் 19 பெண்கள், 6 ஆண்கள் உள்பட மொத்தம் 25 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 8 மணி அளவில் எந்திரத்தில் இருந்து மருந்து தீட்டப்பட்ட தீப்பெட்டி குச்சிகளை சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது எதிர்பாராதவிதமாக தீக்குச்சிகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியது. இதையடுத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அங்கிருந்து வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதுகுறித்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முனியாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தீ மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியதால் கோவில்பட்டியில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  கழுகுமலை இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Previous Post Next Post