தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் (2021-22ம் ஆண்டிற்கான தொகுதி II) மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், உடனிருந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 84 கிராமங்கள் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தினை சேர்ந்த 4 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.66 இலட்சம் மதிப்பில் வடக்கு ஊரணி தூர்வாறும் பணிகள், மெயின்ரோடு, பிள்ளையார்கோவில் முதல் மற்றும் மூன்றாவது தெருவில் ரூ.11.61 இலட்சம் மதிப்பில்
பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.10.93 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் உள்ள குண்டு ஓடை, அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி,
குப்பைகள் தரம் பிரிக்கும் மையம், நல்லமுத்தாள் ஊரணியினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மகளிர் திட்டம் மூலம் வங்கியில் கடன் பெற்று தையல் தொழில் செய்து வரும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும் தையல் தொழில் புரிந்து வரும் பெண்களுக்கு தேவையான உதவிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வீரபத்திரன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.