பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலமாக ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் 9025 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக இன்று காலை
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் VTC SUN என்ற சரக்கு கப்பலின் மூலமாக ரூ.48.30 மதிப்பிலான 14712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ. 11.90 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள்
என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே. எஸ். மஸ்தான், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சரின் சார்பில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில் மீதம் உள்ள அரிசி மற்றும் இதரப் பொருட்களை மூன்றாவது கட்டமாக அடுத்த சில தினங்களில் இருந்து வேறு ஒரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், வ.உ.சி துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாரன்ஸ் மற்றும் அதிகாரிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.