கோவில்பட்டி அருகே பைக் மீது கார் மோதியதில் 4 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தார்.
விளாத்திகுளத்தையடுத்த வெங்கடேஷ்வராபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மார்சல் ராஜா(38). காடல்குடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் இவர் மற்றும் இவரது மனைவி தேவிகா(30), மகன்கள் ரஸ்வந்த்(6), ரிஷாந்த்(4) ஆகியோர் நேற்று திட்டங்குளம் தொழிற்பேட்டையில் உள்ள ஜவுளி கடையில் துணி எடுத்து விட்டு பைக்கில் வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளனர்.
மார்சல் ராஜா ஓட்டிச் சென்ற பைக் , தொழிற்பேட்டை முன்பு சாலையை கடக்க முயன்ற போது, எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் பைக் மீது மோதியுள்ளது. இதில் பைக்கில் வந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ரிஷாந்த் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எஞ்சிய இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் மார்சல் ராஜா முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் விளாத்திகுளம் பூமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவராமச்சந்திரனை(24) கைது செய்தனர்