இந்திய கோதுமை, கோதுமை மாவு, ஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு.!

இந்திய கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின்  ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் இந்திய கோதுமையை இறக்குமதி செய்து அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. தற்போதைய கோதுமை தட்டுப்பாட்டால் இந்தியாவில் இருந்து பெறப்படும் கோதுமையை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு தடைவிதித்துள்ளது. அதாவது உணவு பொருள் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதனை ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ளது.

மேலும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த தடையின் காரணமாக இந்தியாவில் இருந்து கிடைக்கும் கோதுமையை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பொருளாதார அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா இடையே கடந்த பிப்ரவரியில் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் இருநாடுகள் இடையேயான பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி வரிகளை குறைக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில் இருநாடுகள் இடையேயான வருடாந்திர வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் தான் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் கூட ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்நாட்டு நுகர்வோருக்காக கோதுமையை இந்தியா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்(மே) 14ல் இந்தியா திடீரென்று கோதுமை ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்திருந்தாலும் கூட தற்போது வரை 469,202 டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post