தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கரடிகுளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 30000 மரக்கன்றுகள் நடும் விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில்,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
தொடந்து கனிமொழி கருணாநிதி எம்.பி பேசுகையில்
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழலை பேணி காப்பதற்காக மரக்கன்றுகளை ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மரங்கள் நட்டு திட்ட உறுப்பினர்கள் மூலமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தார்கள்.
இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு இன்று நடைபெறுகின்ற இவ்விழாவின் மூலம் உலகமே தூத்துக்குடி மாவட்டத்தை உற்றுநோக்கும் நாளாக அமைந்துள்ளது. ஏனென்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மரங்கள் இல்லாமல் அதிக வெயிலும், வறட்சியும் நிறைந்த மாவட்டம்.
அப்படிப்பட்ட இம்மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 1 இலட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இன்று 168000 மரங்கள் நடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக கரடிகுளத்தில் மட்டுமே 30000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதை காணும்போது இந்த மாதத்திலே 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். இதற்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனர்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இலக்கினை நிறைவேற்றிட வேண்டும்.
கரடிகுளம் ஊராட்சி பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரக்கன்றுகள் நடுவதைக் காணும்போது அதிக பெருமை அடைகிறேன். நடவு செய்யப்படும் மரங்களை நீங்களே பராமரித்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும். நாம் வளர்க்கும் ஒவ்வொரு மரமும் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பரிசு.
எத்தனை சொத்துக்கள் சேர்த்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தரப்போகிற மிகப்பெரிய பரிசு மரங்கள்தான். இம்மரங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அரண்களாக பாதுகாப்பாக இருக்கும். இன்னும் சில மாதங்கள் கழித்து வரும்போது மரங்கள் வளர்ந்ததை நாங்கள் காண வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்.
கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அவர்கள் பழுதடைந்த சாலைகளை செப்பனிடவும், பழுதடைந்துள்ள நீர்தேக்க தொட்டியினை பழுது நீக்கி சீரமைத்திடவும் புதிதாக நீர்தேக்க தொட்டிகள் அமைத்து தரவும் உப்பு நீரை சுத்திகரித்து சுத்தமான குடிநீர் வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அக்கோரிக்கையின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அய்யனார் ஊத்து மற்றும் தெற்கு இலந்தைகுளத்தில் 60000 லிட்டர் நீர்தேக்க தொட்டி கட்டி கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இனி வரும் நிதியில் கட்டாயமாக 60000 லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டியினை கட்டித்தருவேன் என உறுதி அளிக்கிறேன் என கூறினார்
முன்னதாக கரடிக்குளம் ஊராட்சி பகுதிகளில் இன்னும் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்காக வைக்கப்பட்டுள்ள விதைகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் , மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், முன்னிலையில் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய தலைவர் மாணிக்கராஜா, கரடிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி, துணைத்தலைவர் ஆரோக்கியம், ஊராட்சி செயலர் கொம்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.