திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாட சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் விளையாட செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 7 வயது குழந்தையான நித்திஷா , 4 வயது குழந்தைகளான நித்திஷ், மற்றும் கபிலன் ஆகியோர் அவ்வாறு அங்கு பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவை திறந்து உள்ளே சென்று விளையாடியுள்ளனர். அப்போது கார் உள்புறமாக லாக் ஆகியுள்ளது. இதனால் திறக்க முடியாமல் போராடிய குழந்தைகளுக்கு சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. காரின் கதவை திறக்க கோரி குழந்தைகள் கூச்சல் போட்டுள்ளனர். ஆனால் அவர்களது அலறல் சத்தம் வெளியே இருந்த யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் விளையாடச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அப்போது மூன்று பேரும் காருக்குள் மயங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளது மூன்று பேரையும் காரிலிருந்து மீட்ட நிலையில் இரு குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாக அங்கேயே உயிரிழந்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பயன்படுத்தாத காருக்குள் 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.