1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் அமைச்சர் சேகர்பாபு தகவல்.


தூத்துக்குடி மாவட்டத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்செந்தூர் உடனுறை சோமநாதர் - சோமசுந்தரி அம்பாள் திருக்கோயில், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அருள்மிகு மெய்கண்ட ஈஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு கணபதீஸ்வரர் திருக்கோயில்,  

அருள்மிகு அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில் ஆகிய 4 கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , 


சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், , 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா  ஆகியோர் முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்கள்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


தமிழ்நாடு முதமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, ஈரோடு, திருச்செங்கோடு, மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற திருக்கோயில் திருப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்தோம். 

இன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் ஆய்வு செய்தோம்.  

தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழகத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்களை புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இந்த ஆண்டு அரசு சார்பில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 

அந்த ரூ.100 கோடி ரூபாயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றோம். மொடக்குறிச்சி சக்தீஸ்வரர் திருக்கோவில் திருப்பணிகள் செய்யப்படாமல் இன்னும் 5 ஆண்டுகளில் திருக்கோயில் இருந்த இடம் தெரியாத அளவுக்கு செல்லும் வகையில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.  


இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கவனத்திற்கு வந்தவுடன்  முதலமைச்சர் அவர்களின் திருக்கோயில்கள் திட்டத்தில் சேர்த்து உபயதாரர்களையும், இந்து சமய அறநிலையத்துறையின் நிதியையும் இணைத்து திருக்கோயிலின் திருப்பணிகள் ரூ.3.70 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது. 

அந்த திருக்கோயிலுக்கு அருகில் இருக்கின்ற வரதராஜபெருமாள் கோயில், செல்லாண்டி அம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களை சென்று பார்வையிட்டோம். அதன் தொடர்ச்சியாக அர்த்த நாரீஸ்வரன் திருக்கோயில் திருத்தேர் பவனியை பக்தர்கள் சூழ மகிழ்ச்சியாக துவக்கி வைத்தோம். 


இந்து சமய அறநிலையத்தின் சார்பில் தொடங்கப்பட்டிருக்கின்ற அர்த்தநாரீஸ்வரன் திருக்கோயில்  கல்லூரியையும் நேரடியாக சென்று மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்தோம். 

அதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் குறித்தும், 2018ம் ஆண்டில் தீவிபத்து ஏற்பட்ட வரவசந்தராயர் மண்டபம் கட்டும் பணிகளையும், மண்டபம் கட்டுவதற்கான கற்களையும்  நேரடியாக சென்று ஆய்வு செய்தோம்.

அதேபோல் கோயிலுக்கு சொந்தமான பசுமடம், தென்னந்தோப்பு ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு ஜீயர் அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம்.  

திருச்செந்தூர் உடனுறை சோமநாதர் - சோமசுந்தரி அம்பாள் கோயிலில் இன்று இறைவனை தரிசனம் செய்தோம். மேலும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் திருக்கோயில் மெய்கண்ட ஈஸ்வரர் திருக்கோயில் கணபதீஸ்வரர் திருக்கோயில்,  

அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில் ஆகிய 4 கோவில்களை பார்வையிட்டோம். சுமார் 700 ஆண்டுகள், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில்கள்களை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் பராமரிக்காவிட்டால் வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்காது. 

இந்த கோயில்களை புணரமைத்து திருப்பணிகள் செய்வதற்கான முழுசெலவினையும் ஏற்றுக்கொள்வதாக மீன்வளம்,  மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  உறுதியளித்துள்ளார். 

இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து உறுதியாக திருப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு இன்று ஒன்றரை ஆண்டுகளில் பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் அளவிற்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். 

கும்பாபிஷேக விழாவில்  முதலமைச்சர் அவர்களின் உத்தரவுடன் நாங்கள் கலந்துகொள்வோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்  வெளிப்படைத்தன்மையாக உள்ளது. இங்கு சிதம்பரத்தில் போன்று ரகசியம் கிடையாது.  முதலமைச்சர் உத்தரவின்படி, திருச்செந்தூர் கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகள் தொடர்பான வரைபடத்தினை பார்வையிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்படி, பல ஆக்கப்பூர்வமான பணிகள் அடுத்தடுத்து செய்து இன்னும் 3 ஆண்டுகளில் வெளிமாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கு இணையாக பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 

பக்தர்களிடம் நேரடியாக கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு அவற்றை நிறைவேற்றி தருவோம். இன்னும் ஓரிரு மாதங்களில் திருப்பணிகளை துவக்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.  

முதலமைச்சர், தமிழகத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு திருக்கோவில் பணிகளை துவக்கி வைத்து வருகிறார். முதலமைச்சர் அவர்களின் கால நேர நேரத்தை பொறுத்து நேரடியாக வருவதா அல்லது திருக்கோவில் பணிகளை அங்கிருந்து தொடங்கி வைப்பதா என்பது பணிச்சுமையை பொறுத்துதான் முடிவு செய்யப்படும். 

இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறையின் 2022-2023ல் அறிவிப்பு 15 எண்ணில,12 திருக்கோயில்களில் 108 மகளிர்கள் பங்குபெறும் பவுர்ணமி திருநாளில் விளக்கு பூஜை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். 

அதன்படி, பண்ணாரி அம்மன் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மள் திருக்கோயில், சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயில்,  காளியம்மாள் திருக்கோயில், குலசை முத்தாரம்மன் கோயில் உள்பட 12 திருக்கோயில்களில் துவக்கப்படுகிறது. 

குலசை முத்தாரம்மன் கோயில் இன்று நாங்கள் தொடங்கி வைக்கிறோம்.  எல்லாம் வல்ல இறைவனின் இன்பம் அனைவரது வீட்டிலும் நிரம்ப வேண்டும் என்பதற்காக இந்த திருவிளக்கு பூஜை செய்யப்படுகிறது.  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பணிகளை மேற்கோள்ள திட்ட மதிப்பீட்டில் ரூ.175 கோடி ஏற்றுக்கொள்வதாக எச்.சி.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. முழுமையா மதிப்பீடு இன்னும் தயாரிக்கப்படவில்லை. 

மதிப்பீடு தயார் செய்யப்பட்டவுடன் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு எம்பெருமாள் முருகனை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். 

திருச்செந்தூர் கோயிலுக்கு ஆண்டுக்கு 60 முதல் 70 லட்சம் பேர் வருவதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தரிசனம் செய்வதற்கான இடம் குறுகலாக இருப்பதால் பக்தர்கள் வரிசையில் 3 மணி நேரம், 4 மணி நேரம் நிற்க வேண்டியுள்ளது. 

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு மாற்று திட்டம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படும். தற்காலிகமாக பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்துதரப்படும்.  

அதேபோல் முதியோர்கள், ஊனமுற்றோர்களுக்கு 4 பேட்டரி கார்கள் வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு முழுநேர  அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

பக்தர்கள் தங்கி தரிசனம் செய்வதற்கு 500 பேர் தங்கும் வகையில் கொட்டகை அமைத்துள்ளோம். பக்தர்கள் விடுதி கட்டுவதற்கு நிதி தேவைப்படுகிறது.  முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று போதிய நிதியினை பெற்று இந்த ஆண்டு 

இறுதிக்குள் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் தேவைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நிறைவேற்றி தரப்படும். 

முதலமைச்சர்  உத்தரவின்படி, திருச்செந்தூர் கோயிலில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருங்காலங்களில் விரைவாக முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, வட்டாட்சியர் சுவாமிநாதன், 

நகர்மன்ற தலைவர்கள் சிவஆனந்தி (திருச்செந்தூர்), முத்துமுகமது (காயல்பட்டிணம்), காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர் செல்வி.சுகந்தி, திருச்செந்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், கவுன்சிலர் சுதாகர், 

பஞ்சாயத்து தலைவர்கள் சதீஷ்குமார் (மேலஆத்தூர்), சோபியா(புன்னக்காயல்), சந்திரா மாணிக்கவாசகம் (சேர்ந்தபூமங்கலம்), ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், மாவட்ட ஆவின் தலைவர்ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரம்மசக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post