தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன் முறையாக 1,80,000 டன் கொள்ளவு கொண்ட கேப்சைஸ் வகை மிகப் பெரிய சரக்கு கப்பல் 'கேப் ப்ரீஸ்' இன்று கையாளப்பட்டது. அவற்றின் அளவு காரணமாக உலகின் ஒரு சில துறைமுகங்கள் மட்டுமே அவற்றை முழுமையாக கையாளும் வசதியை பெற்றுள்ளன.
சரக்கு கப்பல்களை அவற்றின் கொள்ளளவு, எடை மற்றும் பனாமா கால்வாயை கடக்கும் அளவுடன் ஒப்பிட்டு அதனை Handysize, Handymax, Supramax, Ultramax, Panamax, Kamsarmax, Post-Panamax, Capesize என்று வகைப்படுத்தவும் வடிவமைக்கவும் செய்கின்றனர்.
இவற்றில் ஹேண்டிசைஸ் (Handysize) கப்பல்கள் 15,000 முதல் 35,000 டன் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டவை மற்றும் 130m முதல் 150m வரை நீளம் கொண்ட இவை 10m ஆழம் கொண்டவை.
நவீன கட்டமைப்புகளுடன் கூடிய ஹேண்டிமேக்ஸ் (Handymax) கப்பல்கள் 35,000 முதல் 48,000 டன் எடை வரை கொண்டு செல்ல முடியும். இது 150 மீ முதல் 200 மீ வரை நீளம் கொண்ட 11 மீ முதல் 12 மீ வரையிலான ஆழம் கொண்டவை.
Supramax கப்பல்கள் நடுத்தர அளவிலான கப்பல்கள் ஆகும், அவை 48,000 முதல் 60,000 டன் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டவை, வழக்கமான ஆழம் 12.2m மற்றும் 199m நீளம் கொண்டது. அவற்றின் சிறிய அளவு காரணமாக, Supramax கப்பல்கள் சிறிய துறைமுகங்களுக்குள் அதிக அளவு கையாளப்படுகின்றன.
அல்ட்ராமேக்ஸ் (Ultramax) எனப்படுபவை நடுத்தர அளவிலான கப்பல்கள். Supramax கப்பல்களை விட பெரியது, அவை பொதுவாக 60,000 முதல் 65,000 டன் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இந்த கப்பல்கள் சிறிய Supramax கேரியர்களை விட மேம்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.
Panamax கப்பல்கள் நடுத்தர அளவிலான கப்பல்கள் ஆகும், அவை 65,000 மற்றும் 80,000 டன் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டவையாகும்
கம்சார்மேக்ஸ் (Kamsarmax) கப்பல்கள் 80,000 முதல் 85,000 DWT வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட நடுத்தர அளவிலான கப்பல்கள்ஆகும். இந்த கப்பல்கள் பனாமா கால்வாய் வழியாகவும், மேற்கு ஆபிரிக்காவில் உள்ள போர்ட் கம்சர் வழியாகவும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன .
போஸ்ட் பனாமாக்ஸ் (Post-Panamax) கப்பல்கள் 85,000 முதல் 110,000 இடையே தாங்கும் திறன் கொண்ட பெரிய கப்பல்கள் ஆகும். பனாமாக்ஸுக்குப் பிந்தைய கப்பல்களும் பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் (Capesize) கேப்சைஸ் கப்பல்கள்தான் உதிரி சரக்குகளை (Bulk cargo) கையாளுவதில் மிகப்பெரிய அளவாக உள்ளது. இது 17மீ ஆழம் மற்றும் ஒன்பது சரக்கு ஹோல்களுடன் (Hatch) தோராயமாக 230மீ முதல் 300 மீ நீளம் வரை இருக்கும். அவற்றின் பெரிய அளவு காரணமாக, உலகின் ஒரு சில துறைமுகங்கள் மட்டுமே அவற்றை முழுமையாக கையாளும் வசதியை பெற்றுள்ளன. அவற்றின் சுமந்து செல்லும் திறன் 110,000 முதல் 200,000 டன் வரை இருக்கும். நிலக்கரி, இரும்பு தாது மற்றும் பொருட்களின் மூலப்பொருட்களின் போக்குவரத்தில் கேப்சைஸ் கப்பல்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன
இந்த நிலையில் 292 மீட்டார் நீளமும் 45.05 மீட்டர் அகலமும் உடைய கேப் ப்ரீஸ் என்ற கேப்சைஸ் கப்பல் 11.4 மீட்டர் மிதவை ஆழமுடன் ஓமான் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்திலிருந்து 92,300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சமுடன், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல்தளம் 9-ல் கையாளப்பட்டது. இக்கப்பலிருந்து, Eastern Bulk Trading & Shipping Pvt Ltd., நிறுவனத்திற்க்காக சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இக்கப்பலின் சரக்கு கையாளும் முகவர்கள் சீ போர்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கப்பல் முகவர்கள் சீபோர்ட் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் ஆவர்கள். முன்னதாக 22.01.2015 அன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், MV Lake D என்ற கேப் வகை 18.34 மிதவை ஆழம் கொண்ட கப்பலினை துறைமுகத்தின் கப்பல் காத்திருக்கும் பகுதியில் (Anchorage Area) 6,000 டன் இரும்பு தாதினை மிதக்கும் பழுதுக்கிகள் மூலம் கையாண்டது.
இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் தா.கீ. ராமசந்திரன் கூறுகையில் இது போன்ற பெரிய வகை கப்பல்களை கையாளுவதன் மூலம் சரக்கு போக்குவரத்து செலவுகளை குறைப்பதுடன் உலகளவில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக்கத்தை மிக குறைந்து கட்டணத்தில் கையாள முடியும் என்று கூறினார். மேலும் இக்குறிப்பிடத்தக்க சாதனையை புரிவதற்கு உறுதுணையாக இருந்த, கப்பல் முகவர்கள், சரக்கு கையாளும் முகவர்கள், நகரும் பழுதுக்கி மற்றும் கன்வேயர் இயக்குபவர்கள், துறைமுகத்தின் கடல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தற்போது பல்வேறு வகை சரக்குகளான, நிலக்கரி, சரக்குபெட்டங்கள், சுண்ணாம்புகல், ஜிப்சம், காற்றாலை இறகுகள், இயந்திர உதிரி பாகங்கள், உரங்கள், மற்றும் உணவு தானியங்களையும் கையாண்டு வருகிறது. மேலும் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை, மிகச்சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த உள்நாட்டு இணைப்பு, திறன் வாய்ந்த துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகமானது தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் துறைமுகாக திகழ்கிறது.