பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். ஆனால், அது உண்மை இல்லை என்று தூத்துக்குடியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக மகளிரணி செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்,
கடந்த ஆட்சியாளர்கள் நாம் செய்யும் திட்டங்கள் ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டுபிடித்து பேசுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பேசுகிறார். ஆனால், அது உண்மை இல்லை.
ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு குற்றச் செயல்களை ஒடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பிற்காக காவல்துறையுடன் சமூகநலத் துறை இணைந்து பணியாற்றி வருகிறது. இன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படுகிறது. உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்ற பத்திரிக்கை உடனடியாக தாக்கல் செய்யப்படுகிறது. குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படுகிறது. முதல்வர் எடுத்துவரும் துரித நடவடிக்கையால் பழைய காலத்தில் உள்ள குற்றச்செயல்கள் மீது கூட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக விருதுநகர் வழக்கு இப்போது தான் வெளிவந்தது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முழு விவரத்தை நானும் பலமுறை சபையில் தெரிவித்து விட்டேன். முதல்வரும் தெரிவித்து விட்டார்.
ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவர்கள் ஆட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.
அமைச்சர்கள் தங்களது கஜானாவை நிரப்புவதில் மட்டுமே குறியாக இருந்தார்கள். இவர்கள் இன்று நம்மை குற்றம் சொல்லலாம் என்று நினைக்கின்றனர். தமிழகத்தில் இன்று யாரும் கைநீட்டி குறை சொல்ல முடியாத ஒரு ஆட்சியை தமிழக முதல்வர் செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.