நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர கோரி திருப்பூர் தொழில் துறையினர் ஆறு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
பனியன் உற்பத்திக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.50 இன்று அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கிலோ ரூ.440 ஆக இருந்த நூல்விலையானது கிலோ ரூ.480 ஆக உயர்ந்து உள்ளது.
நூல்விலை கடந்த ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதால் உற்பத்தி செலவும் இரு மடங்காகியுள்ளது. இதனால் ஏற்கனவே பெறப்பட்ட பனியன் ஆர்டர்களை முடித்து தர முடியாமல் ஏற்றுமதியாளர்கள் சிக்கலுக்கு ஆளாகி உள்ளார்கள்.
பஞ்சு மற்றும் நூல் பதுக்கல் மற்றும் பருத்தி ஏற்றுமதி ஆகியவைதான் நூல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இப்படி தாறுமாறாக உயர்ந்து வரும் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரை சார்ந்த தொழில் அமைப்பினர் அனைவரும் ஆறு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
திருப்பூரின் தொழில் அமைப்புகளான சைமா, டீமா, உள்பட 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் இன்று காயத்ரி ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
16 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை அனைத்து பனியன் உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
இதன் மூலம் வேலை நிறுத்தம் நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளைக்கும் 200 கோடி ரூபாய் அளவிலான பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.