முருங்கப்பாளையம் மயானத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டக் கூடாது... பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

 திருப்பூர் மாநகராட்சியின் 27 வது வார்டுக்குட்ப்பட்ட முருங்கப்பாளையத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை23, 26, 27 வது வார்டு மற்றும் 30 வது வார்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அங்கு மாநகராட்சி சுகாதார மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில், திருப்பூர் சுப்பராயக் கவுண்டர் கல்யாண மண்டபத்தில் இன்று மயான பூமி ஆக்கிரமிக்கும் மாநகராட்சியை கண்டிப்பது குறித்தான பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 
முருங்கப்பாளையம் மயானம் 100 ஆண்டுகளுக்கும் மேல் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதால் இங்கு மயான பரப்பளவை குறைக்க கூடாது.ஆரம்ப சுகாதார மைய கட்டிடத்தை இங்கு அமைக்க கூடாது. இங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் மாநகராட்சியின் டி.எஸ்.கே.மருத்துவமனை உள்ளதால் இந்த திட்டத்தை வார்டின் மையப்பகுதியில் வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கிறேன் என்ற பெயரில் பொதுமக்கள் சார்பில் மயானத்தில் அமைக்கப்பட்டு இருந்த பெரிய ஷெட் இடிக்கப்பட்டு உள்ளது. மேலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த இரண்டு மரங்களை வேரோடு வெட்டி எடுத்துஉள்ளனர்.  மரங்களை வெட்டியவர்கள் மீதும், ஷெட்டினை இடித்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன். அதே இடத்தில் பொதுமக்கள் சடங்குகள் செய்வதற்கு அமைத்திருந்த ஷெட் போலவே புதிய ஷெட் அமைத்து தர வேண்டும். இந்த ஷெட் இடிப்பது, மயானத்தில் ஆரம்ப சுகாதார பணிகள் எல்லாம் தெரிந்து இருந்தும் பொதுமக்களுக்கு தகவல் தராத 27 வது வார்டு மாமன்ற உறுப்பினரை கண்டிப்பது. என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Previous Post Next Post