தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி சுப்பையாபுரத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர் மகேஸ்வரன் சிங், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில்,.. "தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தமிழக மக்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் தனது மக்கள் சேவையால் பெரிய தலைவியாக உருவாகி மக்களின் நன்மதிப்பை பெற்று விளங்குகிறார். அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் குளத்தூரைச் சேர்ந்த தமிழ்நாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த காந்திமள்ளர் என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்பு எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி அவதூறாகவும் வன்மைத் தூண்டும் வகையிலும் ஜாதி பிரிவினையை தூண்டும் வகையிலும் பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி சமூக வளைத்தளம் மற்றும் பல செய்தி தாள்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்து படித்து விட்டு பலர் நான் கட்சித் தோழர்களுடன் பொது இடத்தில் நின்று கொண்டிருக்கும் போது என்னிடம் இவ்வாறு அவதூறு செய்தி வந்துள்ளது என்று கேட்டனர். இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சலும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. காந்திமள்ளர் என்பவரது அவதூறு பிரச்சாரத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி.புகழுக்கும் மரியாதைக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே காந்தி மள்ளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்துள்ள புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநகர திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் சாமுவேல் ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் குபேர் இளம்பரிதி, திமுக வக்கீல்கள் அந்தோணி செல்வ திலக், சக்தி நடராஜன், ராஜ்குமார், முத்துச்சாமி, சரவணா, தங்கமாரியப்பன், மற்றும் செந்தில்குமார், விண்மீன் பாலா, ரகுபதி, ஆகியோர் உடன் வந்திருந்தனர்.