கோவில்பட்டி செய்தியாளர்களை அவமானப்படுத்திய ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம் , இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மைதானம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் வழக்கறிஞர் அய்யலுசாமி தெரிவித்துள்ளார்.
ஹாக்கிப்பட்டி என்று அழைக்கப்படும் கோவில்பட்டி நகரில் ஹாக்கி வளர்ச்சிக்கும், ஹாக்கி வீரர்கள் திறமை வெளி உலகத்திற்கும் தெரியப்படுத்துவதில் கோவில்பட்டி செய்தியாளர்கள் பணி என்பது பாராட்டுக்குரியது. கோவில்பட்டி நகரில் நடக்கும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியை சர்வதேச ஹாக்கி போட்டிக்கு இணையாக செய்திகளை வெளியிட்டு இந்த உலகத்திற்கு காட்டிவரும் பெருமை கோவில்பட்டி செய்தியாளர்களை சாரும்.
அவ்வாறு சிறப்பாக செயல்படும் எங்கள் செய்தியாளர்களை நேற்று ஹாக்கி மைதானத்தில் அவமானப்படுத்தும் வகையில் ஹாக்கி போட்டியாளர்கள் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது.
கடந்த 10 தினங்களுக்கு மேலாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தியை சேகரித்து வெளியிட்ட செய்தியாளரை அவமானப்படுத்தியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயமரியாதை என்பதனை தொடர்ந்து வலியுறுத்தும் இயக்கம் திமுக. அந்தத் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், போற்றுதலுக்குரிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் புதல்வி கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைவராக இருந்து நடத்தும் ஒரு தேசிய ஹாக்கி போட்டியில் செய்தியாளர்களின் சுயமரியாதையை நிலைகுலைய வைக்கும் வகையில் நடந்துகொண்ட விதம் வேதனைக்குரியது மட்டுமல்லாது கண்டிக்கத்தக்கது.
அதிலும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் போராடும் நிலையில் , ஹிந்தி தெரியவில்லை என்றால் வெளியே போ என்று எங்கோ இருந்து வந்த ஒருவரை வைத்து சொல்ல வைத்து செய்தியாளர்களை அவமானப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இந்தப் போட்டியை நடத்தும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, செய்தியாளர்களை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாளை இறுதி போட்டி நடைபெறும் போது காங்கிரஸ் கட்சி சார்பில் மைதானத்தில் உள்ளே கண்டன போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என வழக்கறிஞர் அய்யலுசாமி தெரிவித்தார்.