முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அனைத்து ஆதீனங்கள் சந்தித்து பட்டிணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் பட்டிணப் பிரவேசம் நடத்த தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். மனிதரை மனிதரே பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட பலர் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த ஆண்டு பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் மற்றும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
அதே சமயம் திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தோர், முற்போக்கு சிந்தனையாளர்கள் உள்ளிட்ட பலர் பட்டிணப் பிரவேசம் நடத்த தடைக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்கு சுமூகமான தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து பட்டிணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அதற்கான அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், வரும் 22ஆம் தேதி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டிணப் பிரவேசம் நிகழச்சி பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறவுள்ளது.