மதுரை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு பிற்போக்குத்தனமான மகரிஷி சரகர் (சரக் ஷபத்) உறுதிமொழி - தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.!

மருத்துவ பட்டம் பெறும் மாணவர்கள், 'ஹிப்போக்ரேட்ஸ்' உறுதி மொழியை ஏற்பதற்கு பதில், 'மகரிஷி சரகா' உறுதிமொழியை ஏற்க வேண்டும்' என, தேசிய மருத்துவ ஆணையம் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இதற்க்கு இந்திய மருத்துவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

மூன்று லட்சம் மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவர்கள் சங்கமான இந்திய மருத்துவர்கள் சங்கமானது தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தவறான வழிகாட்டல் என்றும் குற்றஞ்சாட்டியது.

எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர். ஹரிஜித் பாட்டி ஸ்கூப்வூப் (Scoopwhoop.com) இணையதளத்திடம் பேசியபோது, “இச்செயலானது எல்லாவற்றையும் காவி நிறமாக்கும் முயற்சி. ஆர்எஸ்எஸ் தன்னை மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்று காட்ட விரும்புகிறது. இந்திய மருத்துவத்தை பரவலாக்குவதோ அல்லது ஆயுர்வேதத்தின் நன்மைகள் பரப்புவதோ தவறில்லை. ஆனால், அவர்கள் மேற்கத்திய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை முற்றிலும் குறைத்து காட்ட விரும்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது” என்று கூறியிருந்தார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.ரவிந்திரநாத், “நீ ஆசைப்பட்டது வெற்றியடைய, சொத்துக்களும் புகழும், இறப்பிற்குப் பிறகு மருத்துவன் என்ற முறையில் சொர்க்கமும் கிடைத்திட, பசுக்கள் தொடங்கி எல்லா உயிர்கள் மற்றும் பிராமணர்கள் நலனுக்குகாக வழிபாடு (pray) செய் என்ற வரிகள் சரகர் உறுதி மொழியில் வருகிறது. அதை ஏன் மருத்துவ மாணவர்கள் உறுதி மொழியாக ஏற்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் கல்லூரி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் சமஸ்கிருத உறுதிமொழியான மகரிஷி சரகர் (சரக் ஷபத்) ஏற்றனர்.அசை்சர்கள் பழனிவேல் தியாகராஜ், பி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை கண்டித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள கண்டனத்தில்

"கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஹிப்போக்ரேட்ஸ், மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவர், மருத்துவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளையும் ஏற்படுத்தினார்.இவரின் மருத்துவக் கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் விதமாக, இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறுவதற்கு முன், மாணவர்கள் ஹிப்போக்ரேட்ஸ் உறுதிமொழியை ஏற்பது வழக்கமாக உள்ளது. இதை மாற்ற, தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்தது.

மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!

கிரேக்க மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ் நோயாளிகள் அனைவருக்கும் நம்பிக்கையளித்து, மருத்துவம் அளிக்க வேண்டும்; நல்லறிவு, இரக்கம், அன்பு, நேர்மை ஆகிய பண்புகளை மருத்துவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றார். அதுவே உலகம் முழுவதும் மருத்துவ மாணவர்களால்  உறுதிமொழியாக ஏற்கப்படுகிறது!

இந்திய ஆயுர்வேத அறிஞர் சரகரின் தத்துவம் என்பது மன்னரால் வெறுக்கப்படுவோருக்கோ, மன்னரை வெறுப்போருக்கோ மருத்துவம் அளிக்கக்கூடாது; கணவர் இல்லாமல் மனைவிக்கு மருத்துவம் அளிக்கக் கூடாது என்பதாகும். இந்த பிற்போக்குத் தத்துவம் மருத்துவர்களின் உறுதிமொழியாக இருக்கக்கூடாது!

சரகர் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்பதை தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரையாக மட்டுமே வழங்கியுள்ள நிலையில்,  அதை மாணவர்களை ஏற்கச் செய்தது தவறு. இது மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை  ஏற்படுத்தும். இது மருத்துவத்துறைக்கு நல்லதல்ல!

சரகர் உறுதிமொழியை, தங்களுக்குத் தெரியாமல், மாணவர்களே ஏற்றுக்கொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறுவது தவறு; அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் யார்? என்பதை விசாரித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post