பயணிகள் உயிர் காக்க தன்னுயிர் விட்ட அரசு பேருந்து ஓட்டுனர் : நெஞ்சுவலியோடு பேருந்து ஓட்டி மருத்துவமனையில் உயிர் விட்ட பரிதாபம் - பயணிகள் அஞ்சலி.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையிலும், உடனடியாக மருத்துவமனையில் சேராமல், பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தபின், ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுனரின் செயல் பயணிகளை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. 

நேற்று காலை 11 மணியளவில் நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுனர் மீசை முருகேச பாண்டியனுக்கு, சாத்தான்குளத்திற்கு முன்பாக கருங்கடல் பகுதியில் வந்தபோது பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகக் நடத்துனரிடம் கூறியுள்ளார்.

இதனால் பதட்டமடைந்த நடத்துனர், "உடனடியாக மருத்துவமனை செல்வோம்" என ஒட்டுனர் முருகேச பாண்டியனை அழைத்துள்ளார். இதனை மறுத்த அவர் சிறிது தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு "பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு அவசர தேவைக்காக சாத்தான்குளம் நோக்கி செல்கின்றனர். அதனால் உடனே பேருந்தை எடுத்துக்கொண்டு சாத்தான்குளம் சென்றுவிடலாம்" என பேருந்து நடத்துனரிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து சாத்தான்குளம் பேருந்து நிலையத்திற்கு அந்த பேருந்து வந்தவுடன் பேருந்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் மீசை முருகேசபாண்டியனை, பேருந்து நடத்துனர் மற்றும் நேரக் காப்பாளர் ஆகியோர் ஆட்டோவில் ஏற்றி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சென்ற மீசை முருகேசபாண்டியன், மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார். பயணிகள் நலனை கருதாமல் நெஞ்சுவலி வந்த உடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் என அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

தனக்கு நெஞ்சு வலி வந்தாலும் பேருந்தில் பேருந்தில் பயணம் செய்த 50 க்கும் மேற்பட்ட பயணிகளுக்காக நெஞ்சு வலியோடு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்த பின்னர் உயிரிழந்ததாக மீசை முருகேசன் பாண்டியனுக்கு சக ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து பயணிகள் அஞ்சலி செலுத்தினர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post