கோவில்பட்டி, கயத்தாறில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் வட்டார தலைவர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார துணை தலைவர் எம்.இன்னாசிமுத்து, வட்டார செயலாளர் டி.மாரியப்பன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கனகவேல், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.ரத்னாவதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட இணை செயலாளர் எஸ்.செல்லத்துரை, வட்டார செயற்குழு உறுப்பினர் மு.ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கயத்தாறு யூனியன் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத்தலைவர் பாலையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் ராமலட்சுமி, பொருளாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார்.