தமிழக சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் திருப்பூரின் மின் தேவைகள் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர்: ’’திருப்பூர் மாநகரத்திற்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும் வகையில், திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுமா என்பதையும், மேலும் திருப்பூர் தெற்கு வளையன்காடு வி.பி. சிந்தன் நகரில் 3 வீதிகளில் உயர் மின்னழுத்த கம்பிகள் குடியிருப்புகளுக்கு இடையூறாக உள்ளன, இதனை மாற்றியமைக்க பொது மக்கள் சார்பில் ரூ.2,58,121/- இரண்டு மாதங்களுக்கு முன்பு வங்கி வரைவோலை மூலம் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது.அதை உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதனையும், மேலும் வீடுகளில் குடிசை தொழிலாக பாத்திர தொழில் செய்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு முன்வருமா என்பதை மாண்புமிகு பேரவை தலைவர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது, 'திருப்பூர் மாவட்டடத்தில் 14 இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். எனவே அந்த பணிகளோடு மாண்புமிகு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சுட்டிக்காட்டியிருகின்ற அந்த பணிகளும் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படும், மேலும் அவர் கூறிய மற்ற கருத்துக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.