பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.!

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் செயலையும், கருத்துரிமைக்கு எதிரான போக்கையும் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நாளை மாலை 4:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் அறிக்கை.

சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்கு பா.ஜ.க சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாக கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது அவரை வரவேற்பதற்கு பா.ஜ.க சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா என்றும் செய்தியாளரிடம் கேட்டார். மேலும் பேசிய அண்ணாமலை உங்களுக்கு '200 ரூபாய் நிச்சயம்.. அறிவாலயத்தில் வாங்கிக் கொள்ளலாம்' என செய்தியாளரை அவமதிக்கும் வகையில் பேசினார். தொடர்ந்து அந்த செய்தியாளரை கார்னர் செய்து ரூ.3000 வரை வாங்கிக்கொள்ளலாம் என கோபப்பட்டு பேசினார் அண்ணாமலை. இதனால் பத்திரிகையாளர்கள் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையிலான அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த அண்ணாமலை , கேள்வி கேட்டவரைப் பார்த்து அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் கிடைத்துவிடும் என்று ஆரம்பித்து திடீர் ஏலதாரராய் மாறிப் போய்க் கொண்டே 3000 ரூபாய் என்று அவதூறான வகையில் பேசியிருக்கிறார்.

ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், தங்களுடைய கடமைகளை செய்ய அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை.

இது போன்ற பேச்சுக்களை அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கு. இந்த போக்கை கைவிட்டு நாவடக்கத்துடன் நயத்தகு நாகரீக அரசியலை அண்ணாமலை கற்றுக் கொள்ள வேண்டும். ‘யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.' என்ற திருக்குறளை தமிழக பாஜக தலைவர் தொடர்ந்து படிக்கவும் வலியுறுத்துகிறோம். தர்மத்தை உணர திருக்குறள் துணை நிற்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post