மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் கல்லூரி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர். இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது முதலமாண்டு மாணவர்கள் தங்களது சீருடையை அணிந்த பின் வழக்கமான இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக, மாணவர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ' சமஸ்கிருத உறுதிமொழியான 'மகரிஷி சரக் ஷபத்' உறுதிமொழியை வாசிக்க மற்ற மாணவர்கள் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு நடைபெற்ற போதே அதனை படித்துக்கொண்டிருந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் உறுதிமொழி ஏற்பு குறித்து சந்தேகத்தை எழுப்பினார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: -
மருத்துவர்கள் இப்போகிரட்டிக் சத்தியப்பிரமாணத்தை மட்டுமே ஏற்கும் நிலையில், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ' சமஸ்கிருத உறுதிமொழியான 'மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி ஏன் ஏற்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக கூறப்படும் விவகாரத்தில் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதில் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி எடுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது குறித்து கல்லூரி முதல்வரிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் கேட்டுள்ளது.