பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி - மாநில மதிமுக தொண்டரணி துணை செயலாளர் பேச்சிராஜ் மகன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டபின் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
"இந்தியாவில் தற்போது மின் தட்டுப்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசு தான் காரணம். மே மாதம் மின் தேவை அதிகம் உள்ளது. அதற்கேற்றாற்போல் நிலக்கரியை வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது. ஆனால் மாநில அரசை மட்டும் குறை சொல்வது தவறானதாகும்.
ஸ்டெர்லைட்டை பொறுத்தவரை தமிழக அரசு திறப்பதில்லை என்ற முடிவோடு முதலமைச்சர் உள்ளார். இந்த தொகுதி எம்.பி.யான கனிமொழி நிச்சயம் திறப்பதற்கும் சம்மதிக்க மாட்டார். அதற்கான வாய்ப்புகள் கிடையாது. கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நல்ல சுகாதாரமான காற்றையும் மாசு இல்லாத தண்ணீரையும் நாங்கள் பயன்படுத்தி பலனடைந்து வருகிறோம். ஒருவிதமான மாசுவால் முகத்தில் ஏற்படும் மாற்றம் கூட தற்போது இல்லாமல் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.
திமுக அரசு பொறுப்பேற்றபின் கொரானாவின் தாக்கம் அதிகமாக உள்ள நேரம். அதேபோல் நிதி நெருக்கடி என்று பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரியை வழங்காது உள்ளது. இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசாணையாக பிறப்பித்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. முதலமைச்சரும் அதற்கேற்றாற்போல் பணியாற்றி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணி செய்து வருகிறார்.
இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக இந்த அரசு நிறைவேற்றும். 12 ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் சில பணிகளுக்காக தென்காசி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பலர் பாதிக்கப்படுவதால் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் விரிவாக்கம் வேண்டும் என்று அரசுக்கும் அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது சம்மந்தமாக தலைவர் வைகோ முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளார் என்று தெரிவித்தார்.
பின்னர் தூத்துக்குடியில் உள்ள சங்கொலி செய்தியாளர் மகாராஜன் இருதய ஆப்பரேசன் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து விட்டு பின்னர் மறைந்த வட்ட செயலாளர் விநாயகமூர்த்தி வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகனிடம் நலன் விசாரித்து கட்சியின் சார்பில் ஐம்பதாயிரத்தை துரை வைகோ வழங்கினார்.
மாநிலதொழிற் சங்க செயலாளர் கஜேந்திரன், மதிமுக மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க பொருளாளர் அனல் செல்வராஜ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலாளர் சரவணன், மணிராஜ், மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மாநகர செயலாளர் முருகபூபதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் சரவணபெருமாள், மாணவரணி குமார், தொழிற்சங்கம் அனல் டேவி;ட், நிர்வாகிகள் எல்.எஸ்.கணேசன், தெய்வேந்திரன், பொன் ஸ்ரீராம் உள்பட பலர் உடன் சென்றனர்.