தூத்துக்குடி போல்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி மெயின் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த படிக்கட்டுகள், சாய்தளங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாக அலுவலர் தனசிங், உதவி செயற்பொறியாளர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் போல்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்றினர். அப்பகுதியில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்களில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள், சாய்தளங்கள் அகற்றப்பட்டது.
இந்த பணியின் போது அப்பகுதியில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களின் செப்டிக் டேங்க் கழிவு நீர் குழாய், மழைநீர் வடிகாலுடன் இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மண்டபங்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதுபோல் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.