நிலக்கரி கையிருப்பு, மற்றும் இறக்குமதி விஷயத்தில் மத்திய அரசின் மெத்தனத்தால் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கிடைக்காததால் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கிடைக்காததால் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, நாட்டின் 147 அனல் மின்நிலையங்களில் 26 சதவீதம் அளவுக்கே நிலக்கரி கையிருப்பு இருப்பதாக தெரியவந்தது. இது மேலும் சிக்கலை உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் வினியோகிக்கப்படும் மின்சார அளவு, பற்றாக்குறை அளவு மற்றும் நிலக்கரி உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நிலக்கரி மற்றும் மின்சார தட்டுப்பாட்டை போக்கவும், உற்பத்தியை பெருக்கவும் பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே.சிங் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.