இனி வீடுகள் இடிக்கப்பட்டால், தொழிலதிபரின் வீட்டில் மக்களை குடியேற்றுவோம்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசம்.!

இனி வீடுகள் இடிக்கப்பட்டால், கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டப்படும் தொழிலதிபரின் குடியிருப்பில் மக்களை குடியேற்றம் செய்வோம். இதனால் வரக்கூடிய விளைவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ளும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகரில் சுமார் 259 வீடுகள் உள்ளது.  பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம்  வீடுகளை இடிக்க உத்தரவிட்ட நிலையில்,  வீடுகளை இடிக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவது எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் வசிக்கும் கண்ணையன் என்பவர் தீக்குளித்து அகாலமரணம் அடைந்தார். அதற்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று கோவிந்தசாமி நகருக்கு நேரில் வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கண்ணையன் மனைவி சத்யாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன், ’’ இங்குள்ள மக்களை அனாதைகளை போல, அகதிகளைப் போல நடத்தி இருக்கிறார்கள். நீர்நிலை புறம்போக்கு இடம் அல்ல; பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம். அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுப்பணித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுவிட்டு தனி நபருக்காக மக்களை வெளியேற்றுகிறார்கள். அமைச்சர்கள் என்ன பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டு மக்களை வெளியேற்ற முடியும் என்றால் இங்கு அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் 10 லட்ச ரூபாய் அறிவித்தது போதுமானதல்ல, 50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இனி வீடுகள் இடிக்கப்பட்டால், கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டப்படும் தொழிலதிபரின் குடியிருப்பில் மக்களை குடியேற்றம் செய்வோம். இதனால் வரக்கூடிய விளைவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ளும்'' என்றார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post