தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் 9 மாத கர்ப்பிணி மற்றும் அவரது தாய் உள்ளிட்ட இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவில் குடியிருந்து வந்தவர் முத்துராமன். இவர் மாநகராட்சியில் துப்பறவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காளியம்மாள்(47) இந்த தம்பதியினரின் ஒரே மகளான கார்த்திகா(21) இவருக்கு திருமணமாகி 9-மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் கார்த்திகாவிற்கு வளைகாப்பு நடத்தி தூத்துக்குடி அண்ணா நகரில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் மேற்கூரை கட்டிடம் இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண், தாய், தந்தை மூவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். வீட்டின் வெளியே தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனின் தாயார் (72) என்பவர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ளோரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தென்பாகம் காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், முத்து கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் அவரது தந்தை படுகாயம் அடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உயிரிழந்த தாய் - மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த முத்துராமன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், டவுன் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.